தெய்வீக பிரசன்ன ஜோதிடம்

பிரசன்னத்தின் வகைகள்...

தாம்பூலப் பிரசன்னம், சோழி பிரசன்னம், விவாகப் பிரசன்னம், சந்தான பிரசன்னம், நஷ்டப் பிரசன்னம், தேவ பிரசன்னம், குலதெய்வ பிரசன்னம், திருட்டுப் பிரசன்னம், நீரோட்ட பிரசன்னம், செய்வினை ஏவல் பிரசன்னம், யாத்திரை பிரசன்னம், கர்ப்ப பிரசன்னம், ஆயுள் பிரசன்னம், வியாபார அணுகூலப் பிரசன்னம், காவடி பிரசன்னம், அஷ்டமங்கல பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம், கடிகார பிரசன்னம், எண்கள் பிரசன்னம், பெயர் பிரசன்னம் இன்னும் ஏராளமாக உண்டு.

பிரசன்னஜோதிடம் பார்ப்பவரை தெய்வக்ஞன் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்கள் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடித்து நன்னெறிகளுடன், தாய் தந்தையின் ஆசியோடும் குரு பக்தியும் தெய்வ அனுகூலத்துடன் நவகிரகங்களையும் பஞ்சபூதங்களையும் வான் மண்டலத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஆத்மார்த்தமாக வணங்கி பிரசன்னம் பார்க்க வருபவர்களுக்கு நல் வழிகாட்டியாகவும் அவர்கள் வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில் மிக துல்லியமான பலனுடன் நல்வழி காட்டுபவரே.... பிரசன்ன ஜோதிடர் எனும் தெய்வக்ஞன்.

கேள்வி கேட்பவரும் ஜாதகரும் பிரசன்னஜோதிடரும் இணைந்து அவர்களுடைய தாய், தந்தை, குல தெயவம் மற்றும் குருவை மனதில் நினைத்து வணங்கிவிட்டு தொடங்குதல் சிறப்பான ஒன்று. இவர்கள்தான் நம்மை வழிநடத்துகிறார்கள் அவர்களே நமக்கு வழிகாட்ட வேண்டும் என பிரார்த்தனை வைத்து தொடங்க வேண்டும்.

சகுனம்

பிரசன்னம் ஜோதிடர் பிரசன்னம் பார்ப்பதற்கு அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும்போது எதிரில் வருபவர்கள் அல்லது எதிரில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அவருக்கான சகுனம். ஜாதகர் கேள்வி கேட்க வரும் போது அவரைத் தொடர்ந்தோ அல்லது அவர் வரும் சற்றுநேரத்திற்கு முன் நிகழும் நிகழ்வுகள் ஜோதிடருக்கான சகுனம் ஆகும். இதிலும் கிரகங்கள் சில நிகழ்வுகளை நமக்கு சொல்லும் என்பது உண்மையான கருத்து. சகுனம் நாம் பார்த்து உணர்ந்து தெளிந்து கொள்வதாகும்.

நிமித்தம்

கேள்வி கேட்பவரும், ஜோதிடரை சந்திக்கும் தருணத்தில் எதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் நிமித்தம் ஆகும். சில நேரங்களில் வாசனை வருவது கூட நிமித்தம் ஆகும். பறவைகள், பூச்சிகள், விலங்குகளின் ஓசைகள், பேசும் வார்த்தைகள், பெயர்கள், தும்மல், விக்கல் எல்லாம் நிமித்தத்தை சொல்லும்.

வரும் ஜாதகரின் கேட்கின்ற கேள்விக்கு துல்லியமான பலனை சொல்ல இந்த சகுனமும் நிமித்தமும் உறுதுணையாக அமையும்.

பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து பலன்களை துல்லியமாக சொல்லும் முறைக்கு பிரசன்ன ஜோதிடம் என்பதாகும்.

பிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

ஜாதகத்தை பார்த்து பலன் அறிவதை விட ஒரு பங்கு கூடுதலாக துல்லியமாக பிரசன்னத்தில் பலன் அறியலாம்.

தடைகளுக்கு காரணத்தை ஜாதகரே மறைத்தாலும் தெள்ளத் தெளிவாக

தெரியவைக்கும் பிரசன்னம்.

ஒரு சில தீர்வுக்கு பரிகாரம் உண்டா இல்லையா என தெள்ளத் தெளிவாக பிரசன்னம் எடுத்துரைக்கும்.

ஒரு காரியம் நடந்தால் அதன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வு நடக்கும் என இருந்தால் அதையும் பிரசன்ன காலத்தில் சுட்டிக்காட்டும். சில நேரங்களில் சுப நிகழ்விற்கு பிறகு அசுப நிகழ்வு நடக்கும் என்றிருந்தாலும் சில நேரங்களில் அசுப நிகழ்விற்கு பின் சுப நிகழ்வு என்றிருந்தாலும் சுட்டிக் காட்டும்.

பிரசன்னம் என்னென்ன சம்பவங்களுக்காக பார்க்கலாம்?

நான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் பாண்டிச்சேரியில் வாங்குவேனா ? அல்லது தலைநகர் சென்னையில் வாங்குவேனா என கேட்டால் பிரசன்னம் தான் ஒரே வழி.

பாண்டிச்சேரி தேர்தலில் நான் முதல்வராக வெற்றி பெறுவேனா?

இன்று நடைபெற இருக்கும் மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் நான் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்குமா ?

வங்கியில் விண்ணப்பித்த கடன் எப்போது ஒப்புதல் ஆகும் ?

இன்று பள்ளியில் நடக்க இருக்கும் பேச்சு போட்டியில் நான் வெற்றி பெறுவேனா?

வெளியூர் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த ரெயில் டிக்கெட் காத்திருப்பு வரிசையில் இருந்து உறுதி செய்யப்படுமா?

இன்று எனது நண்பர் எத்தனை மணிக்கு என் வீட்டிற்கு வருவார்?

திருடு போன அல்லது காணாமல் போன பணம், பொருள் திரும்ப கிடைக்குமா?

மின்சாரம் எப்பொழுது வரும்? கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன? நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூ விழுமா ? இதுபோன்று இன்னும் நிறைய கேள்விகளுக்கு பிரசன்னம் மூலமாக மிக எளிதாகவும், துல்லியமாகவும் தீர்வு காண முடியும்.

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு 3 அல்லது 5 பேர்களுக்கு மேல் உள்ள போது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்போது கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒன்றாக அமர்ந்து பிரசன்னம் பார்த்து பலன் பெறலாம்.

சில குடும்பத்தில் குல தெய்வங்கள் தெரியாமல் பல காலம் தேடிக் கொண்டே இருப்பர். இவர்கள் குல தெய்வங்களை கண்டறிவதற்கான அனைத்து அடையாளங்களும் பிரசன்னத்தில் கிடைக்கும்.

சிலரின் வீடுகளில் திடீரென ஏதேனும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். அதற்கான தீர்வை கண்டறியலாம்.

நீண்ட நாட்களாக தீராத பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் பிரசன்னம் பார்க்கலாம்.

தலைமுறை தலைமுறையாக சில குடும்பங்களில் சில நோய்களும் பிரச்னைகளும் வந்து கொண்டே இருக்கும். இந்த காரணத்தை கண்டறிவதற்காகவும் பிரசன்னம் பார்க்கலாம்.

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனாலும் திடீரென மரணம் சம்பவித்தாலும் அதற்கான காரணத்தை கண்டறிய பிரசன்னம் பார்க்கலாம்.

சிலர் வீடு வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என முயற்சி செய்து கொண்டே இருப்பர். ஆனால், அது கேள்விகளாக நீண்டு போகும் அமைப்பு இருப்பவர்கள் பிரசன்னம் பார்க்கலாம்.

கோயில் கும்பாபிஷேகம் தடை ஏற்பட்டாலும் அதற்கான காரணத்தை அறியலாம்.

சிலர் கோயில் கட்டுவதற்கு முயற்சி எடுப்பர். அச்சமயத்தில் ஏதேனும் தடங்கல் வரலாம். மீண்டும் முயற்சி எடுத்தால் தடங்கல் ஏற்பட்டாலும் அதற்கான காரணத்தை பிரசன்னத்தில அறியலாம். தடைகளும் தடைகளுக்கான விஷயங்களும் அகப்படும்.

எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.

கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும்? அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.

இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை, அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும். ஜாதகம் பார்க்க ஜாதகர் நேரடியாக வர வேண்டியது இல்லை ஆனால் பிரசன்ன ஜோதிடம் பார்க்க ஜாதகர் நிச்சயமாக நேரடியாக வரவேண்டும்.

ஜனன கால ஜாதகம் என்பது

ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவது ஆகும். இந்த ஜனன கால ஜாதகத்தில்

சூரியனை மையமாக வைத்து லக்னத்தையும் சந்திரனை மையமாக வைத்து தசா புத்தியும் வைத்து ஜனனமான ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கக்கூடிய பலா பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

பிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.

பிரசன்ன ஜோதிடத்தின் உள்ள துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக திகழ்ந்தார்கள்.

உங்கள் லட்சிய பாதையில் ஏற்படும் தடைகளும் மன சஞ்சலங்களும் உங்களை பக்குவப்படுத்த வருவதாக நினைத்து எதிர்கொள்ளுங்கள் உங்கள் வாழ்வில் நலமே சூழ்ந்து வளமாய் வாழ இப்பிரபஞ்ச இறைசக்தியுடன் தாய், தந்தை, குருமார்கள், முன்னோர்களின் ஆசியோடு சகல சௌபாக்கியங்கள் நிரம்பப்பெற்று உங்கள் வாழ்வில் நீங்கள் உயர..

வாழ்த்துக்களுடன் பாண்டிச்சேரி கிருஷ்ணா.

இறைவனால் அருளப்பட்டு, ரிஷிகளால் காகப்பட்ட இந்த தெய்வீக பிரசன்ன ஜோதிட முறை கடந்த காலங்களில் பலரின் கைகளில் மாட்டி மறைந்து கிடந்தது தற்போது பெரும்பாலானோர் பிரசன்னத்தை பற்றி தெரிந்துள்ளார்கள். பிரசன்னம் என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம், கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் சூட்சமத்திற்கு பிரசன்னஜோதிடம் என்று பெயர்.

ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புகளில் குழப்பம் உள்ளவர்களுக்கும், பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஜாதகமே இல்லை என்றாலும் வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சினைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும் இந்த பிரசன்ன முறை மூலமாக மிக எளிதாக தீர்வு காண முடியும். ஏன் சில நேரங்களில் ஜாதகம் உள்ளவர்களுக்கும் கூட இந்த பிரசன்ன முறை என்பது ஒரு நல்ல தீர்வாக அமையும்.

பிரசன்னத்திற்குள் பல விஷயங்கள் அங்கம் வகிக்கின்றன. அவை கேள்வி எழுப்பியவரின் மனநிலை, குலதெய்வம், முன்னோர்களின் பூர்வ புண்ணியம், சகுனம், நிமித்தம், அவருடன் வரும் பொருட்கள் ஆகியவையும் அங்கம் வகிக்கின்றன.