திருமணமுகூர்த்தம் நிர்ணயம்
சுபமான திதிகள் :
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஏகாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆகிய திதிகள் உன்னதமான சுப பலன்களை வழங்கும். திதிகள். சஷ்டி, சப்தமி, தசமி, துவாதசி ஆகியவை சுமாரான திதிகள். பிரதமை, சதுர்த்தி, நவமி, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திருமணத்தை நிகழ்த்தக்கூடாது.
சுபமான நட்சத்திரம் :
அசுவினி, ரோகினி, பூசம், அஸ்தம், அனுஷம், மூலம் , திருவோணம், உத்திரட்டாதி, மற்றும் ரேவதி மிக உன்னதமான சுப நட்சத்திரங்களாகும். பரணி, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சுவாதி, கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், சதயம் சுமாரான நட்சத்திரங்கள். கிருத்திகை, திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, விசாகம், மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்களில் சுப செயல்களை தவிர்க்கவும்.
காலற்ற, உடலற்ற மற்றும் தலையற்ற
நட்சத்திரங்கள் :
தலையற்ற உடலற்ற மற்றும் காலற்ற நட்சத்திரங்களுக்கும் திருமண வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்மந்தம் உண்டு.
சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரங்களை உடைபட்ட நட்சத்திரங்கள் என்றும் கூறலாம். உடைபட்ட இந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் குறித்தால் திருமண வாழ்வில் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்தி ரங்களின் 1ம் பாதம் மட்டும் ஒரு ராசியிலும் மற்ற இரண்டு, மூன்று, 4ம் பாதங்கள் அடுத்த ராசியிலும் அமைந்திருப்பதால் இவை தலையற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் 1ம் பாதம் மற்றும் 2ம் பாதம் ஒரு ராசியிலும் மூன்று மற்றும் 4ம் பாதங்கள் அடுத்த ராசியிலும் அமைந்திருப்பதால் இவை உடலற்ற நட்சத் திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
குருவின் நட்சத்திரங்களான
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் 1ம் பாதம், 2ம் பாதம், 3ம் பாதம் ஒரு ராசியிலும் 4ம் பாதம் அடுத்த ராசியிலும் அமைந்திருப்பதால் இவை காலற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
அமிர்தாதி யோகங்கள், பிரபலாரிஷ்ட யோகம் :
நாளும், நட்சத்திரமும் இணைவதால் உண்டாகும். அமிர்தாதி யோகங்களில் அமிர்த, சித்த யோகங்கள் மட்டுமே முகூர்த்தத்திற்கு ஏற்றவை. மரண மற்றும் பிரபலாரிஷ்ட யோக தினங்களை தவிர்க்க வேண்டும். அதன்படி கீழே கூறியுள்ள கிழமைகளும் நட்சத்திரமும் இணையும் போது பிரபலாரிஷ்ட யோகம் உண்டா கும் என்பதால் சுபமுகூர்த்தத்தை அந்த நாட்களில் விலக்க வேண்டும்.
ஞாயிறு - பரணி,
திங்கள் - சித்திரை,
செவ்வாய் - உத்திராடம்,
புதன் - அவிட்டம்,
வியாழன் - கேட்டை,
வெள்ளி - பூராடம்,
சனி - ரேவதி
தாராபலம் :
முகூர்த்த நாள் தாரா பலமுடையதாக இருப்பது மிகச் சிறப்பு. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வரும் தொகையை 9ஆல் வகுக்க கிடைக்கும் மீதி 0, 2, 4, 6, 8 என வந்தால் தாராபலமுடைய நட்சத் திரங்களாகும். 1,3,5,7 என வந்தால் அவை தாரா பலம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
சுபமான லக்னம்:
லக்ன பலமுள்ள சுபர் பார்வையுள்ள லக்னங்கள் சுப நிகழ்விற்கு ஏற்றது. பொதுவாக ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மாசி மாதத்தில் வரும் கும்பம் லக்னம் உத்தமமாக இருக்கும். மேஷம், சிம்மம், விருச்சிகம் லக்னங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் பஞ்சகம் பலமுள்ள லக்னமும் , சூரிய உதயத்திற்கு முன், பின் அரை நாழிகைகளில் அமையும் கோதுளி லக்னம் சுப காரியங்களுக்கு ஏற்றதாகும். முகூர்த்த லக்னம் மிக மிக முக்கியம்.
பஞ்சகம் பார்க்கும் முறை :
திதி, வாரம், நட்சத்திரம், லக்னம், துருவம் என்ற ஐந்து பகுதிகள் கொண்டது பஞ்சகம். ஒரு திருமண முகூர்த்தம் அல்லது வேறு சுப முகூர்த்தங்கள் நிர்ணயிக்கும் போது அவசியம் பஞ்சகம் பார்க்க வேண்டும். பஞ்சகம் பார்க்க வேண்டிய முறை.
1. ஞாயிற்றுக்கிழமை முதல் முகூர்த்தம் நடக்கும் கிழமை வரை எண்ணி குறித்துக் கொள்ள வேண்டும்.
2. சுக்கில பிரதமை முதல் அன்றைய திதிவரை எண்ணி வருகின்ற எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும்.
3. அஸ்வினி நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும்.
4. மேஷம் முதல் எண்ணி அப்போதைய லக்னம் வரை எண்ணி குறித்துக் கொள்ள வேண்டும்.
5. லக்ன துருவத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
மேஷம் லக்கினத்திற்கு துருவம்-5
ரிஷபம் லக்கினத்திற்கு துருவம்-7
கும்பம் லக்கினத்திற்கு துருவம்-2
மீனம் லக்கினத்திற்கு துருவம்-6
மற்ற லக்கினத்திற்கு துருவம்-0
ஐந்து எண்களையும் கூட்டி 9 ஆல் வகுக்க வேண்டும். மீதி 0, 3, 5, 7, 9 வந்தால் சிறப்பான முகூர்த்தமாகும். வகுத்த மீதி 1, 2, 4, 6, 8 வந்தால் பஞ்சகமில்லாத அசுபநேரமாகும்.
முகூர்த்தத்திற்கு தவிர்க்க வேண்டிய பொது வான விதிகள்
திருமணத்தை மலமாதத்தில் நிகழ்த்தக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை , தை, பங்குனி மாதங்களில் திருமணம் செய்வது நல்லது. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கடைசி 3 நாட்கள் விலக்கப்பட வேண்டும். இயன்ற வரை சுக்கில பட்ச(வளர்பிறை) காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.
முகூர்த்த லக்கினத்துக்கு 1,7 2, 8-ம் இடங்களில் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். முகூர்த்த லக்னத்தில் ராகு-கேது, மாந்தி அமரக் கூடாது. முகூர்த்த லக்னத்திற்கு முன், பின் ராசிகளில் அசுபகிரகங்கள் நிற்க கூடாது.
ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது. பல சுப முகூர்த்த கால அட்டவணையில் குளிகை நேரத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். பஞ்சகம் கூடிய, லக்ன சுத்தமான முகூர்த்த நாளாக இருந்தால் கூட குளிகை நேரத்தை தவிர்க்க வேண்டும். குளிகை நேரத்தில் செய்யும் செயல்கள் திரும்ப திரும்ப நடைபெறும் .
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தில் கடுமையான மனக்கசப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் நாளிலும் அதற்கு முன், பின் 7 நாட்களிலும் திருமணத்தை தவிர்க்க வேண்டும். கிரகணம் நிகழ்ந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தக் கூடாது.
குரு, சுக்கிரன் அஸ்தமனம் அடையக்கூடாது. குருவும் சுக்ரனும் முகூர்த்த லக்னத்திற்கும், வரனின் ஜென்ம ராசிக்கும் 6,8ல் மறையக் கூடாது.
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியம். மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 10, 14, 19, 22, 27, வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக் கூடாது. ஜென்ம, அனுஜென்ம, திரிஜென்ம நட்சத்திரங்களில் திருமணம் செய்யக் கூடாது. தாராபலம், சந்திரபலம் உள்ள நாட்கள் சிறந்த பலன் தரும்.
சுப ஓரை, இருக்க வேண்டும், கரிநாளாக இருக்க கூடாது.
அஷ்டமச்சனியின் பிடியில் இருக்கும் பொழுது ஜாதகரீதியாக சனியினுடைய தசையோ புத்தியோ நடைபெறும் போது திருமணம் செய்யக்கூடாது . ஆனால் ஏழரை சனி வரும் காலத்தில் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை. சனி என்பவர் திருமணத்தை முடித்துக் கொடுக்கும் கர்மகாரகன்.
மணமகள் மாதவிலக்காக இருக்கும் நாட்களில் திருமணம் செய்யக் கூடாது.
திருமணம் நிகழ்த்தப்பட வேண்டியவரின் நட்சத்திரப் பட்சியும், முகூர்த்த நட்சத்திரப் பட்சியும் அன்றைய தினம் படு பட்சியாகவோ அல்லது முகூர்த்த நேரத்தில் அப்பட்சிகள் துயில், சாவு பணிகளை மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது.
குரு பலமும், சந்திரன் பலமும், தசா புத்திகளும் சரியாக அமையாதவர்கள் திருமண முகூர்த்தம் நாட்களைத் தள்ளிப்போடலாம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் லக்னத்திற்கு 11-ல் சூரியன் இருக்கும் நேரத்தை பயன் படுத்தலாம்.
எண் கணித ஜோதிடத்தில் 8ம் எண் என்பது மோசமான எண். திருமண தேதி 8ஆக இருக்கக் கூடாது. அதேபோல் 4, 5, 7 எண்கள் வரும் தேதிகளிலும் திருமணத்தை நடத்தக் கூடாது.
திருமணம், மழை, மகப்பேறு போன்ற அனைத்தும் இறைவனின் அருள்.
மேலே கூறிய இந்த வழிமுறைகளின்படி சுபமுகூர்த்த நாள் கிடைக்குமா என்றாள் சற்று சிரமம் தான் ஏனெனில் மனிதர்கள் அனைவருமே ஏதேனும் ஓர் ஊழ்வினையை அனுபவிக்கவே இவ்வுலகில் பிறப்பு எடுக்கிறார்கள் என்பதால்
மேலே கூறிய நிலைகளில் ஒரளவு பொருந்தி வந்தாலே மிகச் சிறப்பான முகூர்த்தமாக கருதவேண்டும்.
சாஸ்திரம்,பஞ்சாங்கம் முறையாக கற்றறிந்தவர் நேரம் குறித்தால் அந்த நேரம் நிச்சயம் நல்ல முகூர்த்தமாகத் தான் அமையும்.
ஒரு சுப நிகழ்ச்சிகள் நிகழ்த்தும் நாள், திதி, நட்சத்திரம் மற்றும் முகூர்த்த நேரம், லக்ன சுபத்துவமாக அமைந்தாலே அந்த முகூர்த்தம் பரிபூரணமாக நீண்டகாலம் நற்பலனை அளிக்கும். குலதெய்வத்தையும், குடும்பதெய்வத்தையும் , உபாசனை தெய்வத்தையும், முன்னோர்களையும், குருமார்களையும், மனதில் வேண்டிக் கொண்டு, ஈன்றெடுத்த தாய் தந்தையரின் நல்லாசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்லமுகூர்த்தமாக அமையும்.
உங்கள் வாழ்வில் நலமேசூழ்க!...
வளமாய் வாழ்க!!...
என வாழ்த்துக்களுடன் பாண்டிச்சேரி கிருஷ்ணா
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு முகூர்த்த நிர்ணயம் ஒரு முகூர்த்த நேரம் என்பது ஒன்றரை மணிநேரம் கொண்டகால அளவாகும். மனிதன் தன் வாழ்வை தனக்கு சாதகமாக மாற்றியமைத்து கொள்ள இறைவன் அளித்த வரப்பிரசாதமே முகூர்த்தம். மணப்பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் நேரத்தில் குலதெய்வம், குடும்பதெய்வம், முன்னோர்கள் ,மும்மூர்த்திகள், தேவர்கள், உற்றார், உறவினர்கள், சான்றோர்களுடன், ஈன்றோரின்நல்லாசி கிடைக்க வேண்டும். நல்ல நாளில், நல்ல நேரத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் பொழுதுதான் திருமணம் என்னும் வாழ்க்கை நிறைவான மனமகிழ்வுடன் அமையும்.சுப நிகழ்விற்கான முடிவு எடுத்தவுடன் அதை நிகழ்த்துவதற்கான நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். ஒவ்வொருவரின் வாழ்வில் நிகழும் அனைத்து சுப நிகழ்வுகளையும் சிறந்த சுப முகூர்த்த நேரத்தில் அமைத்துக் கொண்டால் வாழ்வு சிறக்கும்.
முகூர்த்தத்தை தேர்வு செய்யும் விதிகள்
சுபமான வாரம் : திங்கள், புதன், வியாழன், வெள்ளி போன்ற இருகண் உடைய நாட்கள் சுப நிகழ்விற்கு உகந்தது. ஞாயிற்று கிழமை ஒரு கண் உடைய நாள் என்பதால் சுமாரான நாளாகும். செவ்வாய், சனிக் கிழமைகளில் திருமணம் நடத்துவது சிறப்பில்லை.
மிஸ்டர். ஆன்லைன் ஆஸ்ட்ரோ
தொடர்புக்கு
krishna@mronlineastro.com
+919940864640
✔திருமணம் ✔தொழில் ✔வியாபாரம் ✔உடல்நலம் ✔கல்வி ✔பணம் போன்றவற்றுக்கு சிறந்த பிரபல ஜோதிடர் ஆர்.கிருஷ்ணாவிடமிருந்து மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் ஆன்லைன் ஆலோசனையைப் பெறுங்கள். நீங்கள் நேரடியாக கலந்தாலோசிக்க விரும்பினால், நீங்கள் வருகைக்கு முன் தொலைபேசியில் உங்கள் சந்திப்பு தேதி மற்றும் நேரத்தைப் பெறவும்.
Quick links
Copyright 2024 @ Mr. Online Astro.com | All rights reserved. Designed by Mr.NSK !!
+919789732289